13 வயது சிறுமியை மானபங்கம் செய்த இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 8 பேரும் சிக்கினர்

24-11-2020 11:01 AM

சென்னையில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்த இன்ஸ்பெக்டரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெற்ற தாய் உள்பட 8 பேர் கும்பலும் கூண்டோடு சிக்கி சிறை சென்றனர்.

கடந்த 10ம் தேதியன்று வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், ‘‘என்னை பெற்ற தாயே கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார். மேலும் அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் என்னை அடிக்கடி அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடும்படி வற்புறுத்துகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இன்னொரு நபரும் சேர்ந்து என்னை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷனி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. 13 வயது சிறுமியின் தாய் ஷாகிதா பானு கட்டாயப்படுத்தி விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உண்மை என தெரியவந்தது.

அதனையடுத்து போக்சோ மற்றும் 5 (1) (ஏ) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் ஷாகிதா பானு, மதன்குமார், செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 8 பேரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். ஷாகிதா பானு, மதன்குமார், செல்வி, சந்தியா ஆகியோர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். அதற்கு மகேஷ்வரி உள்ளிட்ட நான்கு பேர் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருந்ததால் சிறுமியின் தாய் ஷாகிதா பானு, மதன்குமார், சந்தியா, மகேஷ்வரி என்கிற மகா, வனிதா,  விஜயா ஆகியோரை கடந்த 16ம் தேதியன்று வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கைதான ஷாகிதா பானு உள்ளிட்ட 8 பேரை தவிர முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக் முஸ்தபா ஆகிய மேலும் பலர் மீண்டும் பாதிக்கப்பட்ட சிறுமியை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பாலியல் தரகர்களாக செயல்பட்டு சிறுமியை கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்தது. மேலும் கைதான சந்தியா என்ற பெண் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையைச் சேர்ந்த ராஜேந்திரன் (44) என்பவரும் பிடிபட்டார். ராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய போது அவர் தனது நண்பரும் சென்னை எண்ணுார் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் புகழேந்தியும் சேர்ந்து சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து போலீசார் இன்ஸ்பெக்டர் புகழேந்தியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நபர் சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய வழக்கில் சிக்கியது சென்னை நகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாரபட்சமின்றி செயல்பட்ட துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையிலான வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.Trending Now: