திண்டுக்கல்லில் வாழும் சித்தர்: அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

19-11-2020 06:24 PM

திண்டுக்கல் என்பது கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்பதால் திண்டுக்கல் எனப் பெயர் பெற்றுள்ளது. மதுரைக்கு அருகில் அமைந்துள்ளதாலும், இயற்கையாகவே பல சுற்றுலா தலங்களைப் பெற்றிருப்பதாலும் இங்கு மிக அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் என்றாலே பூட்டு மற்றும் சிறுமலை வாழைப்பழம், பிரியாணிக்கு புகழ் பெற்றது. ஆனால் இதற்கும் அப்பாற்பட்டு திண்டுக்கல் தற்சமயம் சித்தர்கள் வாழும் பூமியாகக் கருதப்படுகிறது. இது ரமண சித்தர் வாழ்ந்த இடமாகும். 27 சித்தர்கள் உள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாழும் சித்தர்கள் திண்டுக்கல்லில் அதிகமாக உள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே பிச்சை சித்தர் என்பவர் வாழும் சித்தராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய இயற்பெயர் அல்லா பிச்சை என்றும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், இவருடைய குடும்பத்தார்கள் இவரைப் பார்க்க வந்தால் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது. இவரிடம் அடி, உதை வாங்குவதற்கும், திட்டு வாங்குவதற்கும் பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், கோடீஸ்வரர்களும் கால்கடுக்க நின்று அடி,உதை வாங்கி செல்கின்றனர். இசைஞானி இளையராஜா கூடப் பிச்சை சித்தரை வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றாராம்.

இவரைப் பற்றிப் பக்தர்கள் கூறும்போது இவர் குளித்து 40 வருடங்கள் ஆகிறது. இயற்கை உபாதையைக் கழித்து நாங்கள் பார்த்ததே கிடையாது. இருந்தாலும் இவர் அருகில் சென்றால் விபூதி, ஜவ்வாது, பூ வாடை ஆகிய வாசனைகள் கமகமவென இருக்கும். இவருக்கு மூக்குப்பொடி பிடிக்கும் என்பதால் பக்தர்கள் இவரை மூக்குப்பொடி சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவரிடம் அடி மற்றும் உதை வாங்கினால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கிப் புத்துணர்வுடன் வாழ்க்கை இனிமையாக அமையும் என்கின்றனர்.


இவ்வாறு அமானுஷ்ய சக்தியுடன் வாழும் சித்தராக வலம் வரும் பிச்சை சித்தரைத் தரிசனம் செய்யத் திருவண்ணாமலை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.Trending Now: