அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காததால் வங்கியினுள் போராட்டம்

16-09-2020 06:40 PM

அடகு வைத்து நகையை திருப்பி கொடுக்காததால் வங்கியின் உள் ஒரு பெண் போராட்டம் நடத்தினார் .நித்திரவிளை அருகே ஆலங்கோடு  முண்டக்காவிளை பகுதியை சேர்ந்த தங்கராஜ் மனைவி கலா (38) . இவர் நடைக்காவு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் வங்கியில் அடகு வைத்த நகையை வாங்க சென்று அசல் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளார். அவர் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் இவ்வங்கியில் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காததால் நகையை திருப்பி கொடுக்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது.

தொடர்ந்து அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்க கேட்டு வங்கியின் உள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக வாவறை பஞ்., தலைவர் மெற்றில்டா, நடைக்காவு பஞ்., தலைவர் கிறிஸ்டல் ஜாண், மாவட்ட பஞ்., கவுன்சிலர் லூயிஸ் உட்பட பலர் வங்கிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் இரு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். வங்கி  நிர்வாகம் சார்பில் கூடுதல் பணம் செலுத்தினால் நகையை திருப்பி தருவதாக தெரிவித்தனர். அதன்படி கலா வங்கி நிர்வாகம் கூறிய தொகையை செலுத்திய பின் அவரிடம் நகை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.Trending Now: