கோர்ட் உத்தரவுகள் கண்காணிக்க தனிப்பிரிவு: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

26-04-2016 10:37 AM

மதுரை

வணிக வரித்துறையில் கோர்ட் உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்றை கமிஷனர் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.   

வரி மதிப்பீடு தொடர்பாக வணிக வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஐகோர்ட்டில் 4 வழக்குகள் தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்து நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:   

சட்டப்படி வரி மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் மேல்முறையீடு முடிவுக்கு வரும் வரைதான் மதிப்பீட்டு அதிகாரிகள் காத்திருக்க வேண்டும். வரி மதிப்பீடு செய்யப்பட்டதற்கு கோர்ட் தடை விதிக்காத நிலையில் உடனடியாக வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டால் அது தொடர்பான உத்தரவு நகல் உடனடியாக கணக்குதாரருக்கு அனுப்ப வேண்டும். மேல்முறையீடு காலத்துக்கு பின்னரும் வரி வசூல் செய்யப்படாமல் இருந்தால், அது தொடர்பாக வணிக வரித்துறை இணை கமிஷனர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதிப்பீட்டு அதிகாரிகள் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்புவதோடு நின்றுவிடாமல் வரி வசூல் செய்வதும் அவர்களின் கடமையாகும்.   

கோர்ட் மற்றும் மேல்முறையீட்டு கமிஷனின் உத்தரவுகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாதபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை நடத்துவதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். இதற்காக அரசு செலவு செய்யக் கூடாது.   

வரி வசூல் செய்யாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தினால், அந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அலுவலரிடம் வசூல் செய்ய வேண்டும். வணிக வரித்துறையினர் வழக்குகளை தொடர்ந்து கண்காணித்து இணை கமிஷனர்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டும். இணை கமிஷனர்கள வழக்குகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும். வணிக வரித்துறையில் கோர்ட் உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்றை கமிஷனர் அமைக்க வேண்டும்.   

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.