தொழிலாளர்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்

12-07-2020 03:27 PM

கோவை,

வேலைக்காக கோவை வரும் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கோவையில் தங்கி பணிபுரிந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து கோவை தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.இவர்கள் இ-பாஸ் மூலம் அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்களே அழைத்து வந்தன. குறிப்பாக மதுரை, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கான இ-பாஸ் கோவை கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கான இ-பாஸ் வழங்கும் அதிகாரம் சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:- மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய வரும் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் வழங்கும் அதிகாரம் சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் கோவை தொழிற்சாலைகளில் பணிபுரிய வரும் தொழிலாளர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.

கோவைக்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு விண்ணப்பித்ததும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதில் காலதாமதம் செய்யப்படுவது இல்லை. கோவைக்கு வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.Trending Now: