பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

10-07-2020 08:45 PM

சென்னை கோடம்பாக்கத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (வயது 19). திருநங்கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு 10.30 மணியளவில் சபினா தனது தோழியான மற்றொரு திருநங்கை ஷெபிக்கா (வயது 18) என்பவருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கத்துக்கு சென்றார். இவர்கள் வழக்கமாக வள்ளுவர் கோட்டம் அருகில் மறைவான இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். வள்ளுவர் கோட்டம் அருகில் வந்த போது அவர்களை இரவு ரோந்து போலீசார் மடக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் இருவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் வாகனத்தின் வழக்கு பதிவு செய்து அபராதம் செலுத்திய பின்னர் திரும்பத்தருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருநங்கை சபினா தனது கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தபடி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் நேராக தான் வசிக்கும் வசிக்கும் வீட்டிற்கு சென்று கோபத்தில் மாடிப்படிக்கட்டு ஓரத்தில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மற்ற நபர்கள் காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு துாக்கிச்சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் வந்ததும் கோடம்பாக்கம் போலீசார் சபினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பிரேத கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, ‘‘திருநங்கை சபினா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் பாலியல் தொழிலுக்காக நின்று கொண்டிருந்தனர். அவர்களை இரவு ரோந்து வந்த போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அப்போது சபினாவின் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் அபராதம் பெறப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர் அந்த வாகனத்தில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வழியில் சபினா தனது ஆண் நண்பர்கள் 3 பேரை சந்தித்துள்ளார். அவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு சென்று தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார். இந்த விஷயத்தை சபினாவின் தோழி ஷெபிக்கா போலீசாரிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். சபினா சந்தித்த ஆண் நண்பர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தனர். கோடம்பாக்கத்தில் திருநங்கை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: