போலீஸ்காரர் மனைவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்

04-07-2020 10:58 AM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் மனைவியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேலகாமக்காபட்டியைச் சேர்ந்தவர் தங்கமணிக்கு மகன் குணசேகரன் ( 32). நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மலைச்சாமி மகள் சரண்யாவுக்கும் (24 ) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


 இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.  தம்பதியினர் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சரண்யா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் தென்கரை போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 இந்த நிலையில், கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால்  சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 இவர்களுடன் க.விலக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சரண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.Trending Now: