வியாபாரிகள் 9 பேருக்கு கொரோனா மக்கள் கலக்கம்

02-07-2020 06:31 PM

நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்ட தற்காலிக சந்தையில் வியாபாரிகள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசேரி கனகமூலம் சந்தையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையை வடசேரி பஸ் ஸ்டாண்டில் மாற்றப்பட்டு தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் காய்கறி வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்ல சுலபமாக இருக்கும் என்று கருதப்பட்டது. 

இந்நிலையில்   வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தையில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தற்காலிக சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. முதல் நாளில் 24 வியாபாரிகளுக்கு எடுக்கப்பட்டதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  9 வியாபாரிகளையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வடசேரி பஸ் ஸ்டாண்டு தற்காலிக சந்தையில் உள்ள  வியாபாரிகளில் சளி மாதிரிகள் எடுக்கப்படாதவர்களுக்கு வடசேரி பஸ் ஸ்டாண்டில் வைத்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.  

வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டது.  வடசேரி பஸ் ஸ்டாண்டு தற்காலிக காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது மாவட்ட மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.Trending Now: