முதலிரவு அன்று புது மணப்பெண்ணை கடப்பாரையால் குத்தி கொன்று விட்டு புதுமாப்பிள்ளை துாக்குப்போட்டு தற்கொலை சென்னை எண்ணுார் அருகே கொடூரம்

11-06-2020 06:20 PM

சென்னை, ஜுன். 11

முதலிரவு அன்று புதுமணப்பெண்ணை கடப்பாரையால் குத்திக் கொலை செய்து விட்டு புதுமாப்பிள்ளை தானும் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை எண்ணூர் அருகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த எண்ணூர், சடையான் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தியா (22). இவருக்கும் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நீதிவாசன் (28) என்ற இளைஞருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் தொலைபேசியில் பேசிப் பழகினர். கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருமணம் கொரோனா லாக்டவுனால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று  காலையில் காட்டூரில் உள்ள பவானியம்மன் கோவிலில் வைத்து திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. உறவினர்கள் வந்து வாழ்த்தி விட்டு விருந்து சாப்பிட்டு விட்டுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து புது மணப்பெண் சந்தியா அலங்கரித்தபடி, பால் செம்புடன் நேற்று இரவு முதல் இரவு அறைக்குள் சென்றார். பின்னர் திருமண வீட்டில் அனைவரும் துாங்கச் சென்றனர். இரவு 11.30 மணியளவில் முதலிரவு அறைக்குள் இருந்து மரண ஓலம் கேட்டது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சத்தம் கேட்டு எழுந்தனர். அப்போது மணமகன் நீதிவாசன் கதவை திறந்துகொண்டு மேல்சட்டை எதுவும் இன்றி வேட்டியுடன் வெளியே தலைதெறிக்க ஓடியுள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமணப்பெண் சந்தியா கடப்பாரையால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.


அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் இது குறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புதுப்பெண் சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணமகன் நீதிவாசன் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. அவரை காணாமல் போலீசார் தேடி வந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் சோமஞ்சேரி வயல் வெளியில் உள்ள வேப்பமரத்தில் முழு நிர்வாணமாக துாக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். தான் கட்டியிருந்த வேட்டியை மரத்தில் கட்டி தனக்குத்தானே துாக்குப்போட்டிருந்தார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு நீதிவாசன் தானும் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் சந்தியாவும், நீதிவாசனும் போனில் தினமும் நீண்ட நேரம் பழகிவந்துள்ளனர். அதில் எதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் நீதிவாசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக அவர் மருந்து மாத்திரைகள் எடுத்து வந்துள்ளார். இடையில் மூன்று மாதங்கள் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் அவர் மனநலம் மீண்டும் பாதிப்படைந்து இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலிரவில் புதுப்பெண்ணை கொலை செய்து விட்டு மாப்பிள்ளை தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுTrending Now: