தஞ்சையில் கொடிகட்டிப் பறக்கும் ‘பாலியல் தொழில்’

02-06-2020 11:03 PM

இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலகப் பிரசித்திப்பெற்ற ‘பெரிய கோயில்’  அமைந்துள்ள தஞ்சாவூர் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சையில் தற்போது உள்ளுர் காவல்துறையினரின் மறைமுக ஆதரவால் ‘பாலியல் தொழில்’ (sex trade)  கொடிகட்டிப் பறக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒரு கும்பல் வெளிமாநிலங்களிலிருந்து பெண்களை வரவழைத்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருகிறது என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி – சானூரபட்டி பிரிவு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று நண்பகல் உடலில் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார். அப்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ 7,500  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையில் கிடந்த பெண் பற்றிய தகவலறிந்த மாதர் சங்கத்தினர் அங்கு சென்று அப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அப்பெண்ணின் பெயர் அந்தோரா என்பதும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிறந்ததாகவும், பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களுரில் பெற்றோருடன் வசித்து வருவதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

பெங்களுரில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் ஒருவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அழைத்துவந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ எனக்கூறி சேர்த்துவிட்டதாகவும், ஆனால் அங்கே இருந்தவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அப்பெண் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன்னை  பெங்களுருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியதாலும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்குபேர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்துவந்து சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்தோரா கூறினார்.

இதையடுத்து, தஞ்சை சரக போலீஸ் டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அந்தோரா கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்திவருவபர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார்;; உள்ளிட்ட நான்குபேர் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக உள்ள அவர்கள் நால்வரையும் தேடிவருகின்றனர்.

போலீஸாரால் தேடப்பட்டுவரும் செந்தில்குமார் பல ஆண்டுகளாக பாலியல் தொழில்  நடத்திவருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செந்தில்வேலன் இருந்த போது. செந்தில்குமார் முதன்முதலாக கைது செய்யப்பட்டார். அதன்பின்னர்,  அவர் இரண்டு. மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு முறை குண்டர் தடைச்சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் உள்ளுர் போலீஸாரின் ஆதரவு இருப்பதால் அவர் தொடர்ந்து அத்தொழிலில் ஈடுபட்டுவருகிறார் என சில நேர்மையான போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், செந்தில்குமாரின் மனைவி ஒரு நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். செந்தில்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பல ஆண்டுகளாக கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறார். அவர் தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது தங்கும் விடுதிகள், மதுக்கடை பார்கள், சூதாட்டக் கிளப்புகளில் அடிக்கடி திடீர் ரெய்டு நடத்தி அதை நடத்தியவர்களுக்கும், அங்கே மாமூல் வாங்கிக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் ‘சிம்மசொப்பனமாக’ இருந்துவந்தார். அவரால் மேல்வருமானம் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் அப்போதைய எஸ்.பி. செந்தில்வேலனிடம் ஒன்றுக்கு இரண்டாக போட்டுக்கொடுத்தனர். அதன் அடிப்படையிலேயே அந்த பெண் ஆய்வாளரின் கணவர் செந்தில்குமார் முதன் முதலாக கைது செய்யப்பட்டு, ‘பெண் ஆய்வாளரின் கணவர் விபச்சார வழக்கில் கைது’ என செய்தி வெளிவரச்செய்து அந்த நேர்மையான அதிகாரியை அசிங்கப்படுத்தி பழி தீர்த்துக் கொண்டனர்.

ஈஸ்வரி நகரில் அக்குறிப்பிட்ட வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்றுவருவதாக ஆர்கனைஸ்டு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் யூனிட்டைச் சேர்ந்த போலீஸார் தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்து ‘அலர்ட்’ செய்துள்ளனர். ஆனால் அது தவறான தகவல் என சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீஸார் பதில் அளித்துள்ளனர் என்கிறார் நேர்மையான காவல்துறை அதிகாரி ஒருவர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள ஒருசில தங்கும் விடுதிகளில் அந்தந்த பகுதி காவல்துறையினரின் ஆதரவுடன் பாலியல் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. அங்கே விபச்சாரம் நடைபெறுவது தெரிந்தும் அப்பகுதி போலீஸார்  நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதற்கு காரணம், அந்த தங்கும் விடுதிகளை நடத்துபவர்கள் அனைவரும் முன்னாள் காவல்துறையினர் என்பதே.  ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் இதுபோன்ற தகவல்களை சேகரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டிய ஸ்பெஷல் பிரான்ச் போலீஸார் அந்தந்த காவல்நிலைய அதிகாரிகளுடன் கைகோர்த்து அக்காவல் நிலையத்திற்கு மாதந்தோறும் கிடைக்கும் மாமூலில்; தங்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு ஆதரவாக ரிப்போர்ட் அனுப்பி வருகின்றனர். அதுவே தஞ்சை நகரில் இதுபோன்ற குற்றச் செயல்கள் பெருகக் காரணம் என்கிறார் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி..

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தர்மராஜன் இருந்த போது, புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாலியல் தொழிலுக்கு பெயர்;போன ஒரு தங்கும் விடுதியில் நேர்மையான இளம் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் திடீரென ரெய்டு நடத்தி அங்கே அறைகளில் இருந்த பாலியல் தொழிலாளர்களையும் வாடிக்கையாளர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். அந்த விடுதி ஓய்வுபெற்ற காவலர் ஒருவருக்குச் சொந்தமானது.

ரெய்டு நடைபெற்ற சிறிது நேரத்தில் அங்கே ஓடோடிவந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த போலீஸ் டிஎஸ்பி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ரெய்டு நடத்திய போலீஸாரை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டார் என்கிறார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.Trending Now: