கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் கோவையில் 5 பேர் கும்பல் கைது

25-05-2020 10:21 PM

கோவை,

சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் ட்ரை ஸ்டார் லிங்க்ஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான தாங்கும் விடுதி உள்ளது.திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் (24 ) , ரோஷினி (22 ) ஆகியோர் இந்த விடுதியை நடத்தி வருகின்றனர். ஓயோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இயங்கும் இந்த தங்கும் விடுதி ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் இயங்கி வருகிறது.கல்லூரிகள் , ஐ.டி. நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த பகுதியில் இதுபோல ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் லாட்ஜுகள் , விடுதிகள் செயல்பட கூடாது என்ற விதிமுறை உள்ளது.

 இந்த ட்ரை  ஸ்டார் லிங்க்ஸ் தனியார் தங்கும் விடுதியில் வெளி ஆட்கள் பெண்களை அழைத்து வந்து தங்கி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (29 ) பிரியங்கா (21 ) ஆகியோர் ஒரு அறையிலும்  போத்தனூரை சேர்ந்த பயாஸ் (27 )  துர்கா (19 ) ஆகியோர் ஒரு அறையிலும் தங்கி இருந்தனர்.அப்போது அந்த விடுதிக்குள் புகுந்த மர்ம கும்பல் ரிசப்ஷனில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மற்ற அறைகளில் இருந்தவர்களிடம் கத்தி முனையில் பணம், நகை, செல்போன்களை பறித்து சென்றனர்.மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து சூறையாடி சென்றனர். மர்ம கும்பல் அங்கிருந்து சென்ற சிறிது நேரம் கழித்து பூட்டிய அறையின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்த ஊழியர்கள் ரத்த காயத்துடன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விடுதியில் தொடர்ந்து விபச்சாரம் நடைபெற்று வருவதை கண்டறிந்தனர். சந்துரு என்ற ப்ரோக்கர் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கல்லூரி பெண்களை புக் செய்வதும், பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி அதில் வாடிக்கையாளர்  தேர்வு செய்யும் பெண்களுக்கு ஏற்ப கட்டணத்தை  நிர்ணயம் செய்து அனுப்புவது சந்துருவின் வழக்கம். இதில் கோவை நகரில் பிரபல கல்லூரிகளில்  படிக்கும் இளம் பெண்கள் பலர் பணத்திற்க்காக ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து பெண்களை புக் செய்தவர்களுக்கு ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள இது போன்ற விடுதிகளில் மணிக்கணக்கில் அறைகளை புக் செய்து கொடுப்பது சந்துருவின் வழக்கம்.இதற்கு சம்பவம் நடந்த இந்த  விடுதியை நடத்தி வந்த சிவகுமார் மற்றும் ரோஷினி ஆகியோர் உடந்தையாக  செயல்பட்டு உள்ளனர். கல்லூரி  படிப்பை முடித்த சிவகுமாரும் ரோஷினியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த விடுதியை கோத்தகிரியை சேர்ந்தவரிடம் இருந்து லீசுக்கு எடுத்துள்ளனர். இந்த விடுதிக்கு ஊரடங்கு சமயத்திலும் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதை அறிந்த ஒரு மர்ம கும்பல்  நேற்று முன்தினம் இந்த விடுதிக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி பணம் நகைகளை பறித்து சென்றது.

தொடர்ந்து மர்மக்கும்பல் குறித்து சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு போலீசார் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது, விடுதியை விபச்சாரம் செய்ய பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளில் சந்துரு என்கிற ரஞ்சித் குமார், சிவகுமார், ரோஷினி,சதாம் உசைன், பயாஸ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Trending Now: