கோவையில் வீடுபுகுந்து முகமூடி கொள்ளையர் அட்டகாசம் பணம்,நகைகளை பறித்து நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து மிரட்டி சென்றதால் பரபரப்பு

23-05-2020 06:54 PM

கோவை, வடவள்ளி காமதேனு நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி சாந்தி (51 ).சாந்தி கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி சத்யா (29 ) என்பவரும் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளனர். 

சத்யா தனது பணிக்காக பழைய ஸ்கூட்டர் வாங்க விரும்பினார்.இதற்காக சாந்தியிடம் சத்யா 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். 

மேலும் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பவர் யாரவது தெரிந்தால் கூறுங்கள் என சத்யா, சாந்தியிடம் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று சாந்தி , சத்யாவிடம் தனக்கு தெரிந்த கவுண்டம்பாளையத்தை  சேர்ந்த  பிரதீப் குமார்(37 )  என்பவர் இருசக்கர வாகனம் விற்பவர் இருக்கிறார் என்றும் அவரை வீட்டிற்கு வரச்சொல்லி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதையடுத்து சாந்தியின் வீட்டிற்கு நேற்று மதியம் சத்யா சென்றார்.

அப்போது வீட்டிற்கு பிரதீப்குமார் வந்தார்.பிரதீப் குமாரை வீட்டிற்குள் அழைத்து சாந்தியும் சத்யாவும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் வீட்டின் கதவை பூட்டினர்.

தொடர்ந்து வீட்டில் இருந்த சாந்தி,சத்யா , பிரதீப்குமார் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கினார்.மேலும் அவர்கள் வைத்திருந்த செல்போன் ,மற்றும் கையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் பறித்தனர்.பின்னர் பிரதீப் குமாரையும்,சத்யாவையும் ஆடைகளை கழற்ற சொல்லி நிர்வாணப்படுத்தினர்.தொடர்ந்து அவர்களை சமையல் அறைக்குள் தள்ளி நிர்வாண நிலையில் இருந்த பிரதீப் குமாரையும் , சத்யாவையும் முகமூடி கும்பல் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.சிறிது நேரம் கழித்து உடைகளை மாட்டிய பின் பிரதீப்குமார் நேராக வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தார்.

சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தினர்.அப்போது முகமூடி அணிந்து வந்திருந்த கும்பல் சாந்தி, சத்யா, பிரதீப்குமாரிடம் இருந்து பறித்து சென்ற  பிரேஸ்லெட், செயின்கள், மோதிரம் 13 பவுன் என்றும், மூன்று பேரும் வைத்து இருந்த விலை மதிப்புமிக்க செல்போன்கள், மற்றும் கையில் வைத்து இருந்த பணம் 8 ஆயிரத்து 500 ரூபாய் என்பதும் தெரியவந்தது. முகமூடி அணிந்து வந்திருந்த வாலிபர்கள் தமிழில் பேசினார்கள் என்றும் அவர்கள் 25 முதல் 30 வயது மதிக்க தக்கவர்கள் என்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் புகுந்த முகமூடி கும்பல் நகை பணம் போன்றவற்றை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் கோவையில் ஒரு முகமூடி கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது கோவை மக்களிடேயே பீதியை  ஏற்படுத்தியுள்ளது.மேலும் முகமூடி கும்பல் பணம் நகைகளை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து சென்று இருப்பது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.Trending Now: