கீழக்கரையில் ஆட்டு இறைச்சி விலை கிடு, கிடு

23-05-2020 12:27 PM

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆட்டு இறைச்சி விலை ஏற்றத்தை  குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறைச்சி பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 25 ரம்ஜான்  முதல் நோன்பு அன்று கீழக்கரையில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.600க்கு விற்றது. இந்நிலையில் ரம்ஜான் (ஈகை திருநாள்) பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆட்டு இறைச்சி  கிலோவுக்கு ரூ.200 தற்போது  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ரூ. 800 கொடுத்து வாங்கி எலும்புடன்  கூடிய ஆட்டு இறைச்சி வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

கீழக்கரையில் அனைத்து ஜமாத், கட்சிகள், அனைத்து சமுதாய அமைப்புளின் பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை  முடிவெடுத்து இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கீழக்கரை பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஆட்டு இறைச்சி வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து விலை ஏற்றம் செய்துள்ள எலும்புடன் கூடிய ஆட்டு இறைச்சி விலையை கட்டுப்படுத்தக்கோரி தாசில்தார், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம்  கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் எம்.ஹஜா நஜிமுதீன் கோரிக்கை மனு அளித்தார்.

பண்டிகை காலங்களில் எலும்புடன் கூடிய ஆட்டு இறைச்சி விலையை உயர்த்துவதை  வாடிக்கையாக கொண்டுள்ள  இறைச்சி   வியாபாரிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என கீழக்கரை மக்களிடம் கடந்த  சில நாட்களாக கோரிக்கை எழுந்துள்ளதுTrending Now: