10 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை போலீஸ் தீவிர வேட்டை நெல்லை ஜங்ஷனில் பரபரப்பு!

23-05-2020 10:44 AM

நெல்லை சதிப்பு காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் மின்மோட்டார் கடை, எலெக்ட்ரீக்கல் கடை, மெடிக்கல் உள்ளிட்ட 10 கடைகளில் அடுத்தடுத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த பகுதியில் மின் மோட்டர் , இரும்புப்பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள்   உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு தடையால் கடைகள் பல நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம்தான் பெரும்பாலன கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரமும் களைகட்டி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் வியாபாரம் முடிந்த அடைக்கப்பட்ட நிலையில் , ஈரடுக்கு மேம்பாலம் சந்திப்பு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில்  உள்ள சந்திரதேவராஜ் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல், முகமது அலி என்பவரின் மின் மோட்டார், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கள் கடை உள்ளிட்ட 10 கடைகளின் கதவின் பூட்டுக்களை உடைத்து பணம் , மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் . காலையில் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர் . இதுகுறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . மேலும் சுமார் 1 லட்சம் ரூபாய்க்குள் பணம் பொருட்கள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. சந்திப்பு காவல்நிலையம் அருகில் உள்ள 10 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Now: