லாக்டவுனில் குடும்ப வன்முறை தொடர்பான 5,702 புகார்களுக்கு தீர்வு * பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ரவி பேட்டி

22-05-2020 10:29 PM

சென்னை, 

தமிழகத்தில் லாக்டவுன் சமயத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,702 புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவை ஊரடங்கு முடியும் வரை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆண்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம் போன்ற ரெட் அலர்ட் பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆண்கள் குடித்துவிட்டு போதையில், வீட்டில் உள்ள மனைவி, உறவுப்பெண்கள், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் என பலதரப்பினரையும் அடித்து உதைப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆண்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு பெண்களை உட்படுத்தி கொடுமைப்படுத்தி குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்தன. அது தொடர்பாக பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணித்து அதனை களைவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். அனைத்து மகளிர்போலீசார் மூலம் வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது சுமுகமாக முடித்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அது தொடர்பான புகார்களில் கவனம் செலுத்தி வருவதாக பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் நெல்லை மாவட்டம்:
––––––––––––––––––––––––––––––
அது தொடர்பாக கூடுதல் டிஜிபி ரவி அளித்துள்ள பேட்டியில், ‘‘
தமிழகத்தில் ஊரடங்கு நாட்களில் மட்டும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 45 புகார்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,424 புகார்களும், அடுத்தபடியாக நெல்லையில் 704 புகார்களும் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்ட ஊரடங்கின் போது 1,427 புகார்களும், 2ம் கட்ட ஊரடங்கின் போது 2852, 3ம் கட்ட ஊரடங்கின் போது 1461 புகார்களும் பதிவாகியுள்ளன. மொத்தம் பெறப்பட்ட 5,740 புகார்களில் சுமார் 5,702 புகார்களுக்கு அனைத்து மகளிர் போலீசார் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையில் ஈடுபட்ட 38 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும். ஏற்கெனவே குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபர்களையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ இவ்வாறு தெரிவித்தார்.Trending Now: