தமிழக அறிவுசார் அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை போலி சானிடைசர் திரவங்கள் தயார் செய்த இருவர் கைது

22-05-2020 09:16 PM

பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் லேபிளை ஒட்டி போலியான சானிடைசர் வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை தமிழக அறிவுசார் அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து போலிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகரில் டாபர், கோத்ரெஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெயரில் ஹார்பிக், லைசால், விம் ஜெல், டெட்டால் போன்ற பாத்ரூம் சுத்தப் படுத்தப்பயன்படும் சானிடைசர் வீட்டு உபயோகப் பொருட்கள் போலி தயாரிப்புக்கள் மார்க்கெட்டில் விற்கப்படுவதாக தமிழக அறிவுசார் சொத்துரிமை போலீசாருக்கு புகார்கள் வந்தன. குற்றப்பிரிவு ஏடிஜிபி ஷகில்அக்தர் உத்தரவின் பேரில் எஸ்பி ராமர் மேற்பார்வையில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் சென்னை நகர் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை, ராயப்பேட்டை, விஎம் தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு பிரபல நிறுவனங்களான டாபர், கோத்ரெஜ் மற்றும் ரெக்கிட் பென்சர், இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனங்களின் லேபிள் ஒட்டிய போலியான வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சென்னை வடபெரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இந்த போலியான வீட்டு உபயோகப்பொருட்கள் தயார் செய்யப்படுவது தெரிவயந்தது. அங்கு சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போலியான கிருமிநாசினி திரவங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர். அவற்றை தயாரித்து பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி லேபிள்களை ஒட்டி விற்பனை செய்த குஜராத்தைச் சேர்ந்த துளசி நாதுசிங் (25), மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரானா (29) இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்  படேல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.Trending Now: