கோயம்பேடு ரவுடியை பிடிக்கச் சென்ற போது போலீசில் சிக்கிய விருகம்பாக்கம் கொலைகாரன், போலீசார் சொன்ன சுவாரஷ்ய சம்பவம்

22-05-2020 06:54 PM

கோயம்பேட்டில் கார் வியாபாரியை அரிவாளால் வெட்டிய ரவுடியை பிடிக்கச் சென்ற போது சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கொலை வழக்கில் ஒருவன் போலீசிடம் பிடிபட்ட சம்பவம் பற்றி போலீசார் சொன்னது சுவாரஷ்யமாக இருந்தது.

சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. ஆட்டோ கன்சல்ட்டன்டான இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தக்காளி பிரபாகரன். வியாபாரிகளை மிரட்டி மாமூல் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தான். சத்தியமூர்த்தியிடம் மாமூல் கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி தக்காளி பிரபாகரன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து நேற்று இரவு கோயம்பேடு பகுதியில் சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்டினான். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள் அங்கு சூழ்ந்து தக்காளி பிரபாகரனை கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய அவனது கூட்டாளிகள் 2 பேரை பிடிப்பதற்காக அவர்களைப் பற்றிய தகவல்களை கோயம்பேடு போலீசார் வாக்கி டாக்கி மூலம் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அவர்களை பிடிக்க ரோந்து பணியை முடுக்கினர்.

அப்போது விருகம்பாக்கம் போலீசார் விருகம்பாக்கம் பகுதியில் ஐஏஎஸ், -ஐபிஎஸ் குடியிருப்பில் பகுதிகளில் ரோந்து சுற்றிவந்தனர். அந்த குடியிருப்பு வளாகம் எதிரில் மைதானத்தில் இருந்த 6 பேர் கும்பல் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர்.

அதிர்ச்சியடைந்த விருகம்பாக்கம் போலீசார் கோயம்பேடு போலீசார் அவர்கள் கோயம்பேடு போலீசார் தேடச்சொன்ன ரவுடிகளாக இருக்கலாம் என்று அவர்களை விரட்டினர். அதில் ஒருவன் மட்டும் கத்தியுடன் பிடிபட்டான். மற்றவர்கள் ஓடிவிட்டனர். அவனிடம் விசாரணை நடத்திய போது அவன் விருகம்பாக்கம் கொள்ளையன் ரமேஷை கொன்றவர்களில் ஒருவன் என தெரியவந்தது. வேறொரு கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியை தேடி சென்ற போலீசாருக்கு தங்கள் லிமிட்டில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். குற்றங்கள் நடந்தாலும் நடக்காமல் போனாலும் சட்டம் ஒழுங்கு போலீசார் தங்கள் முக்கியப் பணியான ரோந்துப்பணியில் தீவிரமாக இருந்தால் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: