ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேரை கைது செய்ய இந்தியா முழுவதும் சல்லடை போடும் என்ஐஏ விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

22-05-2020 06:44 PM

தமிழகத்தைச் சேர்ந்த 7 ஐஎஸ் தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள என்ஐஏ அவர்களை கைது செய்ய இந்தியா முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகிறது. அது தொடர்பாக சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையைச் சேர்ந்தவர் ஹாஜா பக்ரூதின். இவர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா நாட்டிற்கு சென்றவர் அங்கு இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆதரவாக ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஹாஜா பக்ரூதினை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அது மட்டுமின்றி இண்டர்போல் அதிகாரிகளும் ஹாஜா பக்ருதீன் பற்றி துப்பு கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து ஒருபுறம் தேடி வந்தனர்.

ஆனால் 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பயங்கரவாதி ஹாஜா பக்ரூதினை பற்றி தமிழ்நாடு போலீசாருக்கு துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணை 2017ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த விதமான என்ஐஏவுக்கு துப்பும் கிடைக்கவில்லை என்பதால் ஹாஜா பக்ருதீனை என்ஐஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவரைத் தேடி பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள என்ஐஏ இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

மேலும் இதே போல் கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரகுமான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானூதின், சாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேரையும் என்ஐஏ அமைப்பு தேடி அவர்களையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். ஹாஜா பக்ருதீன் உள்பட தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள 7 பேரையும் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தும் கடந்த 1 வருட காலமாக எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.


யார் இந்த ஹாஜா பக்ருதீன்:

–––––––––––––––––––––––

இதுகுறித்து என்ஐஏ தரப்பு கூறுகையில், ‘‘ஹாஜா பக்ருதீன் கடந்த 2014ம் ஆண்டு சிரியா சென்று அங்கு தீவிரவாதப் பயிற்சி பெற்றவர். பின்பு அந்த இயக்கத்துக்கு நிதி மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து அதில் இணைப்பதற்கும் தமிழகம் வந்தார். ஐஎஸ் பயங்கவாத இயக்கத்தின் தமிழக தலைராக செயல்பட்ட ஹாஜா பக்ருதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் வகையில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாத எண்ணங்களை கொண்ட இளைஞர்களை சந்தித்து கூட்டம் நடத்தினார். அவர்களை தனது சொந்த செலவிலேயே சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அப்போது, சென்னையில் வசித்து வந்த கன்னியாகுமரி திருவிதாங்கோடைச் சேர்ந்த அன்சார் மீரானுடன் ஹாஜா பக்ருதீனுக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். முக்கியமாக ஹாஜா பக்ருதீன், குடும்பத்துடன் சிரியா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை அன்சாார் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்தான் ஹாஜா பக்ருதீனுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்ததாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, கடலுார் காட்டுமன்னார் கோயில் காஜா மொய்தீன் என்ற அப்துல் லத்தீப் ஆகிய இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் என்ஐஏவால் கைதாகினர். தலைமறைவாக இருந்த அன்சாரும் 2018ம் ஆண்டு பிப்ரவரி பிடிபட்டான்.

ஹாஜா பக்ரூதீன் மட்டும் இன்னும் கைதாகவில்லை. அவனை கைது செய்ய இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கும் இன்டர்போல் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.Trending Now: