சப்பாத்தை மூழ்கடித்து பாயும் குழித்துறை தாமிரபரணி ஆறு

22-05-2020 05:17 PM

அக்னி நட்சத்திர காலத்தில் குமரியில் இரவு பகலாக பெய்த மழையை தொடர்ந்து நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னிநட்சத்திர காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். கொளுத்தும் வெயிலை  தொடர்ந்து ஆறு, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். இதனால், விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு. இதன்; காரணமாக பொதுமக்கள் குடங்களுடன் பல கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுப்பதும் நீண்டகாலமாக தொடரும் நிகழ்வாக உள்ளது.

இந்த ஆண்டு கடந்த 4-ம்  தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் குமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, அருமனை, பனச்சமூடு, குலசேகரம், பேச்சிப்பாறை, தக்கலை, கருங்கல், நாகர்கோவில், கன்னியாகுமரி, பூதப்பாண்டி என மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக ஆறு, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து மளமளவென உயர்ந்துள்ளது. இதன்காரணமாக குழித்துறை சப்பாத் பகுதியை மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்து காணப்படும் நிலையில், தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குமரியில் தொடர் மழை காரணமாக சற்று இதமான காலநிலை நிலவுகிறது.

மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1,2 போன்ற அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் தட்டுபாடின்றி தண்ணீர் இருப்பு உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடையில் மழை தொடர வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.Trending Now: