கோடையில் கொட்டுது மழை வயலுக்கு நீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை

22-05-2020 05:04 PM

நேற்றைய முன்தினம் விடிய விடிய பெய்த மழையில் தென்னந்தோப்புக்குள் மழைநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த 2 வாரமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை கொட்டுகிறது. குறிப்பாக தக்கலை சுற்றுவட்டார பகுதிகளான திருவிதாங்கோடு, கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, வட்டம், முளகுமூடு, விலவூர், மருந்துக்கோட்டை, குமாரகோவில், வேளிமலை பகுதிகள், முட்டைக்காடு, குமாரபுரம், சித்திரங்கோடு, வீரப்புலி, சுருளக்கோடு, கீரிப்பாறை, பூதப்பாண்டி உள்ளிட்ட பல ஊர்களில் பெய்த மழையினாலும் சூறாவளியாலும் விவசாய பயிர்கள் ஆங்காங்கே நாசமடைந்தது. குறிப்பாக வாழைகள் குலையுடன் முறிந்து விழுந்தும் வேருடன் சாய்ந்தும் காணப்பட்டன. இந்நிலையில் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றைய முன்தினம் விடிய விடிய காற்றுடன் கூடிய மழை பெய்தது. சாலை எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. சில பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் சிறு குறு பயிர்கள் அழுகும் நிலையில் எட்டியுள்ளது. பல இடங்களில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. விலவூர் டவுண் பஞ்-க்குட்பட்ட மருந்துக்கோட்டை பகுதியில் உள்ள தென்னை வாழை ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக கொரோனா வைரஸ் காலத்தில் முடங்கி ஒதுங்கியிருந்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தற்போது தோட்டத்தில் பெருகியுள்ள தண்ணீரால் சூறாவளி வீசும் போது மரங்கள் சாய்ந்து விடுமோ என அஞ்சுகின்றனர்.Trending Now: