ஆளில்லா விமானம் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருந்து தெளிப்பு.

24-03-2020 12:25 PM

சென்னை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று மார்ச் 23 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருந்து தெளித்த பகுதிகளை , தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது பலன் தருவது உறுதியானால்  தேவையான மற்ற இடங்களுக்கும் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கலாம் என பீலா ராஜேஷ் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் செல்லக் கூடாது. 

கடையில் 10 பேருக்கு மேல் கூட்டம் இருந்தால் கூட்டம் குறையட்டும் காத்திருந்து பொருள்களை வாங்குங்கள் என, பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் எப்பொழுதும் தங்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.

மற்ற முன்னெச்சரிக்கைகளையும் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்

இருமல் உள்ளவர்களுடன் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். 

கைகளை அடிக்கடி கழுவுங்கள். முடிந்தவரை அனைவரும் வீட்டிலேயே இருங்கள். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது.

வெளிநாடுகளிலிருந்து வந்த சுமார் 10,000 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளோம். 

கார், ரயில் மூலமாக வந்தவர்களின் பட்டியலையும் தயார் செய்துள்ளோம். அதில், யார் யார் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியலை அளித்துள்ளோம்.

24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை இருக்கிறது. எந்தப் புகாராக இருந்தாலும் கொடுங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு , தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.