ஈரானில் சிக்கிய மீனவர்களை இந்தியா அழைத்த வர நடவடிக்கை நிதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தகவல்

23-03-2020 01:07 PM

மதுரை

ஈரான் நாட்டில் உள்ள தீவுகளில் பணி நிமிர்த்தமாக இருக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்த சகாய சதீஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அதில்," ஈரான் நாட்டில் சுமார் 860 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றவர்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஈரானிலும் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு இருக்கும் இந்தியர்கள் பணிக்குச் செல்ல இயலாததோடு, அன்றாட வாழ்க்கையை நடத்த மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அங்கிருக்கும் இந்தியர்கள் தங்களை மீட்டு இந்தியாவிற்கு கொணர நடவடிக்கை கோரி தங்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மனு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே, ஈரான் நாட்டில் பணி நிமிர்த்தமாக இருக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடல் வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குமரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் " வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில், " ஈரானின் தீவுகளில் இருக்கும் மீனவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை எனவும் அவர்களை பாதுகாக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. . அங்கிருக்கும் மீனவர்களை இந்தியா அழைத்த வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. " என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.