மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதி

18-03-2020 07:00 PM

தூத்துக்குடி,

தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தொடர் காய்ச்சல் மற்றும் தொண்டைவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உண்டா என்பதை அறிய ரத்தம் எடுத்து சோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர். அசாம் மாநிலத்தில் பணியாற்றிவந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.


தூத்துக்குடியில் பணியாற்றி வந்த இவர் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து இவை கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார். இவரது உறவினர்கள் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசோதித்து பார்த்தனர். மேலும் இவரது இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளன.  ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று தெரிய வரும் என்றனர். மேலும் இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு  தகவல்  கொடுத்துள்ளது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்த்து  சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.