கரோனா வைரஸ் பீதி: சென்னை தியாகராய நகரில் கடைகளை மூட உத்தரவு

17-03-2020 08:42 PM

சென்னை

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் கூட்டம் அதிகமுள்ள சென்னை - தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள், மால்கள், பள்ளி, கல்லூரிகள், மதுபான பார்கள் என அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதித்து மாநில சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இனி 2 வாரங்களுக்கு சிறை கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் என யாரும் சந்திக்க முடியாது.

மேலும் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் சென்னையில் பிரதான வணிக தலமாக கருதப்படும் தியாகராய நகரில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குவது ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்எல்ஆர் உரிமம் வழங்குவதும் மார்ச் 31ம் தேதி வரை தடைசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடைமேடை டிக்கெட் விலை உயர்வு

மக்கள்  கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்டரல், எழும்பூர், தாம்பரம், உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட்டின் கட்டணம் ரூ. 10ல் இருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த நபர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.