திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பால் திடீர் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

16-03-2020 01:42 PM

திருச்செந்தூர்

திருச்செந்தூர் ஜீவா நகர் , மீனவர் காலனி , சரவணப் பொய்கை தெரு ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்தது பேரூராட்சி நிர்வாகம்.

தற்பொழுது குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை . இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள்  திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது நிர்வாக அதிகாரி  இல்லாததால் அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வாசல் மற்றும் நாகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.