சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைக்க மேலூர் கோர்ட்டு உத்தரவு!

26-02-2016 07:50 PM

மதுரை: மதுரை அருகே சாமியார் ஒருவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண், அவரது கணவரது புகாரின் பேரில், அங்கிருந்து அழைத்து வரப்பட்டு கணவருடன் அனுப்பப்பட்டார்

மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவர் மேலவளவு போலீசில் அளித்து இருந்த புகாரில், தனது மனைவி தேவி (வயது 28) என்பவருடன் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியில் இருந்து உப்போடை செல்லும் சாலையில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்த சாமியாரிடம் ஜாதகம் பார்த்து விட்டு திரும்பினோம். இதன்பின் எனக்கு தெரியாமல் அந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்த தேவி நாளடைவில் என்னை பிரிந்து அங்கேயே தங்கிவிட்டார். அங்கிருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என கூறி இருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரமத்துக்குச் சென்று அங்கு இருந்த தேவியை மீட்டனர். மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு மிகுந்த மன கஷ்டம் ஏற்பட்டது. ஆன்மிகத்தில் செல்ல விரும்பித்தான் கிடாரிபட்டியில் உள்ள ஆசிரமத்தில் இருந்தேன். தற்போது கணவருடன் செல்ல முடிவு செய்துள்ளேன்என்றார்.

இதனையடுத்து தேவியை அவரது கணவர் அமிர்தராஜூடன் அனுப்பி வைக்குமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து கணவருடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.