அதிமுக யார் கையிலும் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

23-02-2020 04:47 PM

மதுரை,

அதிமுக யார் கையிலும் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது. தமிழக மக்களின் நலனுக்காவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தெரிவித்துள்ளார்.

மதுரை ஜெயின் மேரிஸ் தேவாலயத்தில் அன்ன தான நிகழ்வை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்போது அவர் பேசியதாவது,

மத ரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையிலேயே சமீபத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் முதலமைச்சர் ஈபிஎஸ் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது போலவே தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களுக்காக அதிமுக அரசு கொண்டு வரப்படும் திட்டங்களை பார்த்து திமுகவினர் ஆச்சரியப்படுகின்றனர்.

அதிமுகவின் சாதனையான குடிமராமத்து பணிகளை திமுகவினர் கண்காணிப்பதை வரவேற்கிறேன்.

அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பார்த்து அவர்கள் பொறாமைப்படுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

பாஜகவுக்கு பதில்

பிரதமர் கையில் முதலமைச்சர் இருந்தால் என்ன தவறு என்று பாஜகவின் மூத்த தலைவர் முரளிதரராவ் கூறியிருந்தது குறித்து பதிலளித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்.

அவ்வாறு இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர முடியும்.

அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.