கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – மறு தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு

24-01-2020 02:52 PM

சென்னை,

கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த உயர்நீதிமன்றம், புதிதாக தேர்தல் நடத்தவும் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி, சென்னை – மயிலாப்பூர் புனித எப்பாஸ் உயர்நிலைப்பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. 

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், நடிகரும், இயக்குனருமான கே. பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர்.

முன்னதாக, இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

 பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 

நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்பட வில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

தேர்தல் செல்லாது

இந்த வழக்குகள் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 

மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். 

இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். 

மேலும் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிட்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.