ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல- ஒரு நடிகர்: மு.க. ஸ்டாலின் பேச்சு

21-01-2020 03:45 PM

சென்னை,

நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; அவர் ஒரு நடிகர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தோழமை கட்சிகளுடன் ஆலோசனை

ஜனவரி 24ம் தேதி சென்னையில் திமுக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெறும், அன்றைய தினம், குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

பெரியார் பற்றி துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; ஒரு நடிகர். அன்பு நண்பர் ரஜினிகாந்துக்கு கேட்டுக்கொள்வது என்னவென்றால், 95 ஆண்டுகளாக தமிழ் இனத்திற்கு சேவை செய்த பெரியாரைப் பற்றி பேசும்போது யோசித்து பேசவேண்டும்!  என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

முன்னதாக, திமுக செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கியத்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.