முதலமைச்சரின் லண்டன் பயணத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை: நடிகை குஷ்பு பேட்டி

14-10-2019 01:34 PM

திருநெல்வேலி,

லண்டன் சென்ற முதலமைச்சரால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை  ஆதரித்து சடையமான்குளம், பத்மனேரி, டோனாவூர் கீழக்கருவேலன்குளம், பகுதியில் "கை" சின்னத்தில் நேற்று வாக்கு சேகரித்தார்.

நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன் , எச்.வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

தமிழக மக்களுக்கு அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை. தங்களை காப்பாற்றத்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆட்சி யாளர்களிடம் சுய செயல்பாடு எதுவுமில்லை.

15 அமைச்சர்கள் ஒரே தொகுதியில் இருக்கிறார்கள் என்றால் பயந்துபோய் உள்ளனர் என்றுதான் அர்த்தம். அவர்களது தலைக்குமேல் கத்தி தொங்குகிறது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு என்ன செய்துள்ளது ? எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி உள்ளது. கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.

நாங்குநேரியில் பணத்தை நம்பி அதிமுக தேர்தலில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சி இதுபோல் பணம் செலவழித்தால் இந்தியா முழுவதும் ஆட்சியில் இருந்திருக்கும்.

சீன அதிபர் தமிழ்நாட்டுக்கு வந்ததன் மூலம் உலகம் முழுவதும் நமது கலாச்சாரம் தெரிகிறது. ஆனால், அவர் வந்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை என்பது தெரியவில்லை.

லண்டன் சென்ற முதலமைச்சரால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. ரூ. 2 லட்சம் கோடி முதலீடு வரும் என கூறினார். ஆனால், 2 000 கோடி கூட வரவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தால் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் வளர்ச்சி பெறவில்லை.

தமிழக அரசின் செயல்பாடு மற்றும் ஆதரவு இல்லாததால் இன்று அத்திட்டம் செயலற்று உள்ளது என்று குஷ்பு கூறினார்.Trending Now: