சின்னமுட்டம் துறைமுக விசைப்படகுகள் சார்ந்த தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்

10-10-2019 08:59 AM

திருநெல்வேலி:

கன்னியாகுமரி சின்ன முட்டம் துறைமுக விசைப்படகுகள் சார்ந்த தொழிலுக்கு அனுமதி அளிக்க கோரி நெல்லை மாவட்ட விசைப்படகு உரிமையாளர், மீன்பிடி தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் செட்டிக்குளம், இருக்கந்துறை, நக்கநேரி, சங்கநேரி, யாக்கோபுரம், ஊரல்வாய்மொழி, லெவஞ்சிபுரம், பழவூர், உதயத்தூர், வைராவிக்கிணறு, புதுமனை, புத்தேரி, சேனார்குளம், மதகநேரி, கீழ்குளம், மாரக்குளம், பெரியகுளம், கைலாசபுரம், புன்னார்குளம், விஸ்வநாதபுரம், பெருமணல், மகேந்திரபுரம், சூட்சிபுரம் போன்ற 23 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி சின்னமுட்ட விசைப்படகு தொழிலை சார்ந்து இருந்து வந்துள்ளனர். மேலும் துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், டிரைவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் மீன் உலர்வு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக நெல்லை, குமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னை காரணமாக விசைப்படகு தொழிலுக்கு செல்லாமல் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் சார்ந்த நெல்லை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,‘‘இரு மாவட்ட மீனவர்களின் பிரச்னை காரணமாக விசைப்படகு தொழிலுக்கு செல்லாமல் இருப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற சின்ன முட்டம் துறைமுக விசைப்படகு தொழிலுக்கு செல்லவும், நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் டிவைஸ் பொருத்தி 7 நாட்டிக்கல் தூர தங்கு ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் இரு மாவட்ட மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும், பிரச்னைகளும் ஏற்படாது என நம்புகிறோம்.’’ என்றார்.