பாளை.,யில் தசரா திருவிழா கோலாகலம் நள்ளிரவு சூரசம்ஹாரத்துடன் நிறைவு

10-10-2019 08:45 AM


திருநெல்வேலி:

பாளை.,யில் நள்ளிரவு சூரசம்ஹாரத்துடன் தசரா திருவிழா கோலாகலமாக நிறைவடைந்தது.

நெல்லையில் உள்ள அம்மன் கோயில்களில் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவின் 10ம் நாளான நேற்று பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. பல்வேறு தெருக்களின் வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று முன்தினம் இரவு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சம்பங்களில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதிஉலா நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பாளை.ராமசாமி கோயில் திடலில் ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு மற்றும் தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன், புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், சமாதானபுரம் மாரியம்மன் என 12 சப்பரங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.

நள்ளிரவு சூரசம்ஹாரம்:

நேற்று மாலை 12 சப்பரங்களும் பாளை.,மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேங்காய் உடைத்து அம்பாளை வழிபட்டனர். நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு 12 சப்பரங்களும் எருமை கடா மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஆயிரத்தம்மன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.