வயதான தாயை கழுத்தில் குத்திக் கொலை செய்த மகன் தானும் வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி

10-10-2019 08:27 AM

சென்னை, :

சென்னை பள்ளிக்கரணையில் வயதான தாயை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்த மகன், தானும் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவரது மனைவி பவானி (40). ரமேஷ் தனது தாய் சரஸ்வதி (72) மற்றும் மனைவியுடன் அந்த வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷுக்கும், பவானிக்கும் திருமணம் நடந்தது. பவானிக்கும், மாமியார் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரமேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவானி கோபித்துக் கொண்டு அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தந்தை பாலகிருஷ்ணன் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். மீண்டும் வீட்டுக்கு வந்த பவானி சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் மாமியார், மருமகள் சண்டை மூளவே கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ரமேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தாயார் சரஸ்வதிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிப்படைந்தது. இதனால் அவரை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமலும், சமையல் செய்வதற்கு ஆள் இல்லாததாலும் ரமேஷ் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தாயுடன் நேற்று மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. மனைவி வீட்டை விட்டுப் போவதற்கு தாயார்தான் காரணம் என்றும் நினைத்து ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலையில் தாயாருடன் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தில் வீட்டின் சமையல் கட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தாயார் சரஸ்வதியின் கழுத்தில் ரமேஷ் குத்தியுள்ளார். இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் தானும் அதே கத்தியால் தனது வயிற்றில் குத்திக்கொண்டார். அதனை திரும்ப எடுக்க முயன்ற போது வயிற்றுக்குள் கத்தி சிக்கிக் கொண்டதால் எடுக்க முடியாமல் போனது. இதனால் அவர் வலியால் துடித்து அலறினார். சத்தகம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். வீட்டுக்குள் சரஸ்வதி இறந்து கிடப்பதையும், ரமேஷும் ரத்தவௌ்ளத்தில் துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரமேஷ் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்து போன சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரமேஷ் குணமடைந்ததும் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.Trending Now: