இடுப்பில் இருந்து கத்தியை எடுத்த போது வயிற்றைக் கிழித்து டிரைவர் சாவு

10-10-2019 08:25 AM

சென்னை:

குடும்பத்தகராறின் போது ஆத்திரமடைந்த வேன் டிரைவர் காமெடி நடிகர் வடிவேலு ஸ்டைலில் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வேகமாக வௌியில் எடுத்த போது கத்தி அடி வயிற்றை கிழித்ததால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 26). சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் தங்கி மினிவேன் ஓட்டி வந்தார். இவரது மனைவி சரிதா. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. மனோகரன் கஞ்சா மற்றும் மது

போதைக்கு அடிமையானவர். கடந்த இரண்டு மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை பார்ப்பதற்காக அயனாவரம் புதுநகர் 3வது தெருவிற்கு மனோகரன் குடிபோதையில் சென்றார். அங்கு சரிதாவின் அக்காள் லட்சுமி படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் மனோகரன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அலறினார். இதனைக் கண்டதும் லட்சுமியின் தாய் சம்பூர்ணம் கூச்சல் போட்டபடி மனோகரைத் தாக்கியுள்ளார். அப்போது மனோகரன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியைக்காட்டி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து சம்பூர்ணம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து போலீசார் மனோகரனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் சம்பூர்ணத்திடம் கதவை சாத்திக் கொண்டு  வீட்டுக்குள் பத்திரமாக இருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றனர். பிறகு சம்பூரணம் தன்னுடன் தனியார் ஓட்டலில் வேலை செய்யும் ராகவேந்திரா (வயது 64)  என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். உடனே  ராகவேந்திரா தனது வீட்டின் அருகில் வசிக்கும் சீனிவாசன் (21) என்பவரை தனது உதவிக்கு இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். சம்பூர்ணத்திடம் நீங்கள் இங்கு தங்கி இருப்பது பாதுகாப்பு அல்ல. எனவே எனது வீட்டிற்கு வந்து தங்கி கொள்ளுங்கள் எனக்கூறி சம்பூரணம் அவரது மகள் லட்சுமி மற்றும் மகன் சாய்நாத் ஆகியோரை அழைத்துக் கொண்டு புதுநகர் மூன்றாவது தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது மனோகர் மெயின் ரோட்டில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ராகவேந்திரா, சீனிவாசன் ஆகியோர் மனோகரை பிடிக்க முயன்றனர். அவர் புதுநகர் 4வது தெரு வழியாக தப்பியோடினார். பின்பு இருவரும் விரட்டிச் சென்று பின்னால் துரத்திச் சென்ற ராகவேந்திரா மற்றும் சீனிவாசன் ஆகியோர் அங்கு வைத்து மனோகரை மடக்கிப் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த மனோகர், அவர்களை குத்துவதற்காக தனது வலது பக்க இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காமெடி நடிகர் வடிவேலு ஸ்டைலில் வேகமாக வெளியே எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வலது பக்க அடிவயிற்றில் கத்தி கிழித்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் மனோகர், தன்னைப் பிடிக்க வந்த ராகவேந்திராவை இடதுபக்க மார்பில் கத்தியால் குத்தியுள்ளார்.

 பின்பு மனோகர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மனோகர் மற்றும்  ராகவேந்திரா ஆகிய இருவரையும் மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மனோகர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். பிரேத  பரிசோதனைக்காக உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயம்பட்ட ராகவேந்திராவுக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பூரணம், அவரது மகள் லட்சுமி,  மற்றும் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Now: