6 வயது சிறுமி மொட்டை மாடியில் இருந்து கீழே வீசி படுகொலை கொடூர சித்தி கைது

10-10-2019 08:24 AM

சென்னை:

கணவரின் முதல் தாரத்துக்கு பிறந்த 6 வயது பெண் குழந்தையை ஈவு இரக்கமின்றி மொட்டை மாடியில் இருந்து கீழே வீசி படுகொலை செய்த செய்த கொடூர சித்தியை போலீசார் கைது செய்தனர்.  

சென்னை சேலையூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, சேலையூர், செம்பாக்கம் திருமலைநகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். துரைப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில்  இன்ஜினியராக உள்ளார். இவரது முதல் மனைவி சரண்யா. கடந்த 2014ம் ஆண்டு உடல் நலம் பாதிப்படைந்து இறந்து விட்டார். இதனால் பார்த்திபன் பிஎஸ்சி நர்சிங் படித்த சூர்யகலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த ராகவி (வயது 6) மற்றும் சூர்யகலாவுக்கு பிறந்த 1 ½ வயது மகன் ஆகியோருடன் பார்த்திபன் வாழ்ந்து வந்தார். ராகவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். முதல் மனைவியின் தாய் வளர்மதியும், அங்கேயே தங்கியிருந்து பேத்தி ராகவியை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பார்த்திபன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு போன் செய்த சூரியகலா மகள் ராகவியை காணவில்லை என்று தெரிவித்தார். இதனால் பதட்டத்துடன் வீட்டுக்கு வந்த பார்த்திபன் மகள் ராகவியை பல இடங்களில் தேடினார்.

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதற்கிடையில் மொட்டை மாடிக்கு சென்று பின்புறம் இருந்த புதர் மண்டிய இடத்தில் பார்த்த போது மகளது உடை கீழே கிடப்பது தெரியவந்தது. உடனே கீழே ஓடிச்சென்று பார்த்த போது அங்கே சிறுமி ராகவி ரத்தகாயத்துடன் மூச்சுபேச்சின்றி கிடந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு துாக்கிச் சென்ற போது ராகவி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் உதவிக்கமிஷனர் சகாதேவன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பார்த்திபன் மற்றும் சூர்யகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். முதலில் 2-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி தவறி விழுந்திருக்கலாம் என்ற கருதிய போலீசார் வீட்டின் மாடியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.

மாடியில் இருந்து விழுந்தால் இவ்வளவு தூரத்துக்கு சிறுமியின் உடல் கிடக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர். இதனால் சிறுமி ராகவியை மாடியில் இருந்து கீழே துாக்கி வீசப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக சூரியகலாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்வியில் திணறிய சூர்யகலா ராகவியை மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சூரியகலாவை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கொலை செய்தது ஏன் என்று சூர்யகலா போலீசில் அளித்த வாக்குமூல விவரம் பற்றி போலீசார் தரப்பில் கூறியதாவது:–

ஆரம்பத்தில் சிறுமி ராகவியிடம் பாசமாக இருந்த சூர்யகலா தனக்கு குழந்தை பிறந்ததும் ராகவியை வெறுத்துள்ளார். மேலும் பார்த்திபனின் மாமியார் வளர்மதி வீட்டில் தங்கியிருப்பது சூர்யகலாவுக்கு பிடிக்கவில்லை. அது தொடர்பாக பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ராகவியையும், வளர்மதியையும் ஊரில் கொண்டு போய் விடும்படி சூர்யகலா கூறியுள்ளார். ஆனால் அதற்கு பார்த்திபன் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் சூர்யகலா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அதை பார்த்திபனிடம் தெரிவித்த போது ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். எதற்கு மூன்றாவது பிள்ளை. அந்த கருவை கலைத்து விடலாம் என பார்த்திபன் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சூர்யகலா பார்த்திபனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ராகவியால்தான் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை கணவர் பார்த்திபன் அழிக்கச் சொல்வதாகக் கருதி, ராகவியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கான தக்க சமயம் கிடைக்க வில்லை. இந்நிலையில் ராகவியின் பாட்டி வளர்மதி நேற்று முன்தினம் ஆயுதபூஜைக்காக ஊருக்குச் சென்று விட்டார். சிறுமி ராகவி மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் அன்பாக பேசி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற சூர்யகலா ராகவியை தனது இரண்டு கைகளால் துாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே புதர்பகுதியில் வீசியுள்ளார். அம்மா என்று சத்தம்போட்டபடியே சிறுமி ராகவி கீழே விழுந்துள்ளது. அதன் பின்னர் எதுவும் நடக்காதது போல சிறிது நேரம் கழித்து கணவருக்கு போன் செய்து ராகவியைக் காணவில்லை என கூறி அழுவது போல நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டார்.

விசாரணைக்குப்பின்னர் போலீசார் சூர்யகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமியை ஈவு இரக்கமின்றி சித்தி கொலை செய்த சம்பவம் சென்னை சேலையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.