குடிசைப்பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம்: துணை கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கிவைத்தார்

09-10-2019 11:45 AM

சென்னை,         

சென்னை நகர் முழுவதும் குடிசையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டத்தின் உதவி புரியும் திட்டத்தை சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.

சென்னை நகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவின் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் மகளிர் அமைப்புடன் இணைந்து குடிசை பகுதியில் வசித்து வரும் இளம் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது ஒரு குடிசை பகுதியிலிருந்து 50 இளம் பெண்கள் விகிதம் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஹோம் நர்ஸ், ஓட்டுநர், தையல், பாதுகாப்பு அழகு கலை ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி அளித்து அதில் ஒரு வேலையை தேடிக் கொள்ள உதவி செய்வதாகும். சென்னை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த பயிற்சியினை அளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி குடிசைப்பகுதியில் உள்ள ஏழை இளம் பெண்களிடையே சுயதிறன் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். அதன்பேரில் இந்நிகழ்ச்சி   திடீர் குப்பம், கோதாமேடு, கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை தாமஸ்நகர், சுந்தர நகர் குப்பம், திடீர்நகர் குப்பம், மக்கிஸ் கார்டன் குப்பம் ஆகிய 10 குடிசை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று இந்த திட்டம் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னை நகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்த இந்த விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகி தீபாளி கோயல் மற்றும் காவல் சிறார் மன்றத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துரையாடி அறிவுரைகள் வழங்கினர். அவர்களுக்கு குறிக்கோள் ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையில் தினசரி எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முறியடிக்கும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

இதுகுறித்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘‘இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், குடிசை பகுதியிலுள்ள பெண்களை திறமையுள்ளவர்களாக ஆக்குவதாகும். சிறந்த பயிற்சியாளர்கள் கொண்ட அமைப்புகள் மூலம் குடிசையில் வசிக்கும் பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், பெண்கள் திறமை உள்ளவர்களாக ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் மற்றும் சமுதாயமும் பலனடையும் விதமாக முதல் கட்டமாக 16 இளம் பெண்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். பிற்பகலில் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படும். கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரையின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த நாங்கள் சென்னை மாநகரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இதனை கொண்டு செல்ல உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவினர் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தவும் அல்லது ஒருங்கிணைந்து செயல்படவும் ஆவலுடன் செயலாற்றி வருகின்றோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.Trending Now: