தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணை செயலாளர் மீது இணையதளத்தில் அவதுாறு

25-09-2019 01:33 AM

சென்னை:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணை செயலாளர் பற்றி சமூகவலைதளங்களில் அவதுாறு பரப்பியது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளர் பேராசிரியர் சுந்தரவல்லி கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். “நான் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக தளத்தில் பெண் விடுதலை தொடர்பாகவும், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என்னைக் குறித்து மிக இழிவான சொற்களைக் கொண்டு ஆபாசப் படங்களுடன் எனது முகத்தை ஒட்டி வன்மப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

நான் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் போலியான செய்தியை சிலர் பரப்பியுள்ளார்கள். எனது பொதுவாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய செயலாக இது உள்ளது. போலியான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் விஸ்வநாதன் சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் சமூக வலைதளங்களில் பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதுாறு பரப்பியது உண்மை என தெரியவந்தது. அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார்

354 (பெண்ணை மானங்கப்படுத்துதல்), 469 (-நற்பெயருக்கு தீங்குவிளைவிக்கும் நோக்கத்திற்காக போலி ஆவணம் தயாரித்தல்), 509- (மிரட்டல், அவமதித்தல், தொந்தரவு செய்தல்),

தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Trending Now: