அதிமுகவில் சேர்ந்ததால் அடி, உதை: அமமுகவினர் மீது தாய் போலீசில் புகார்

25-09-2019 01:33 AM

சென்னை:

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்ததால் வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபரின் தாய் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, ஆதம்பாக்கத்தைத் சேர்ந்தவர் சுகுமார். டிடிவி தினகரன் கட்சியான அமமுகவில் முன்னாள் வேளச்சேரி மாமன்ற உறுப்பினர் சரவணன் என்பவருடன் சேர்ந்து கட்சியில் அவரோடு வேலை பார்த்து வந்தார். சுகுமாருக்கும், சரவணனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து சுகுமார் விலகினார். அதிமுக வேளச்சேரி பகுதி செயலாளர் மூர்த்தி என்பவர் கீழ் அதிமுகவில் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் சுகுமார் பங்கு பெற்றார். அதனைக் கண்ட அமமுக சரவணன், செல்போனில் சுகுமாரை மிரட்டியுள்ளார். தனக்கு ஆகாதவர்களுடன் சேரக்கூடாது எனவும் மீண்டும் அமமுகவில் இணைய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். சுகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆட்களை வைத்து சரணவன் சுகுமாரை அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுகுமார் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுகுமாரின் தாய் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன் மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.