பேராசிரியர் பிரசாதத்தில் விஷம் வைத்து கொலை: உணவுப்பாதுகாப்புத்துறை உதவியாளர் கைது

25-09-2019 01:32 AM

சென்னை:

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்த பணத்தை திரும்பக் கேட்டதால் கல்லுாரி பேராசிரியருக்கும், அவரது மனைவிக்கும் பிரசாதத்தில் விஷம் வைத்ததில் பேராசிரியர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக உணவகத்துறையில் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காசிமேடு சூரியநாராயண தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). தனியார் கல்லூரியில்  பேராசிரியராக  வேலை செய்து வந்தார். தற்சமயம் கல்லுாரியில் ஆட்குறைப்பு காரணமாக வேலை இன்றி இருந்ததால் சென்னை, காசிமேடு பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா (வயது 30) என்ற மனைவியும் சர்வேஷ் (8), சர்வின் (6) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் எம்.கே.பி நகரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனக்கு அரசுத்துறை அதிகாரிகள் பலரை தெரியும் என கூறிய வேலாயுதம் தனது செல்வாக்கால் வேலை வாங்கித்தரமுடியும் என கூறியுள்ளார். அதனை நம்பி கார்த்திக் வேலாயுதத்திடம் ரூ. 4 லட்சம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலாயுதம் அரசு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமல்  ஏமாற்றி வந்துள்ளார். இதனால் கார்த்திக் தனது பணத்தை திரும்பதரும்படி அடிக்கடி வேலாயுதத்தை வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் வேலாயுதம், அரசு வேலைக்கான நியமன கடிதம் வந்துள்ளதாகவும் அதை நேரில் வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய கார்த்திக், தனது மனைவி சரண்யாவுடன் நேற்று முன்தினம் காலை எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றார். அப்போது வேலாயுதம் ஸ்ரீரடி சாய்பாபா பிரசாதம் என்று கூறி ஒரு பொடியை கார்த்திக் மற்றும் சரண்யாவுக்கு கொடுத்து சாப்பிடக் கொடுத்தார். அதனை சாப்பிட்ட கார்த்திக்குக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே கார்த்திக் தண்ணீர் குடித்துவிட்டு பொடியை சாப்பிட்டு கொண்டிருந்த சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பினர். அங்கிருந்து முல்லை நகர் பஸ் நிலையம் வந்த போது கார்த்திக் வாகனத்தை நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

சரண்யாவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் சிகிச்சை பலனளித்தும் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதுகுறித்து கார்த்திக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது வேலாயுதம் பிரசாதம் கொடுத்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் வேலாயுதத்தை கைது செய்தனர். கார்த்திக் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய திட்டம்போட்டதாகவும், கோவில் பிரசாதம் என கூறி அதில் சல்பியூரிக் பவுடரை கலந்து கொடுத்துக் கொலை செய்ததாகவும் வேலாயுதம் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள உணவுபாதுகாப்புத்துறை ஆய்வகத்தில் வேலாயுதம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்கின் மனைவி சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.