பெண்ணிடம் நகை திருட்டு வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

20-08-2019 12:51 AM

தென்காசி:

பெண்ணிடம் நகைகளை பறித்த வழக்கில் வாலிபருக்கு தென்காசி அமர்வு கோர்ட் 7  ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி அருகே உள்ள இடைகால் துரைசாமியாபுரம் காலனி தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி பாப்பா (50). இவர் கடந்த 13.10.2012ல் இடைகால் அடுத்த கருப்பாநதி ஆறு வயலில் பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது சிவராமபேட்டை தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கைலாசசுந்தரம் (எ) சுந்தரம்(23), பாப்பாவின் கழுத்தில் கிடந்த சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றார்.

பாப்பா அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைலாச சுந்தரத்தை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தென்காசி அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், கைலாசசுந்தரத்திற்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் வாதாடினார்.