பாளை. அருகே மகளிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள்

20-08-2019 12:46 AM

திருநெல்வேலி,:

பாளை.,அருகே மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

பாளை.அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுணன் மகன் ஜெகநாதன் (45). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகள் தந்தையுடன் வசித்து வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது மகளிடம், தந்தை வரம்பு மீறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாளை.அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பால்கனி ஆஜரானார்.