வாகன சோதனையில் வாலிபர் மீது தாக்குதல் : கருங்கல் அருகே பரபரப்பு

20-08-2019 12:36 AM

கருங்கல்:

கருங்கல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபர் மீது தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை கருங்கல் காவல் நிலையம் முன் கருங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு வாகன சோதனையை முடித்துக் கொண்டு போலீசார் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் சிறப்பு காவல் படையை சேர்ந்த போலீசார் 3 பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். அப்போது கட்டட வேலைக்கு செல்லும் பாலவிளையை சேர்ந்த வாலிபர் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வந்துள்ளார். இதை பார்த்த சிறப்பு காவல் படையை சேர்ந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த வாலிபர் பைக்கை நிறுத்திவிட்டு பின்னர் கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் பைக்கை பிடித்து இழுத்து வாலிபரை  மூன்று பேரும் சேர்ந்து தாக்கினர். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் பைக்கில் வந்தவரை எப்படி தாக்கலாம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிக அளவு கூடியதால் மூன்று போலீசாரும் நைசாக நழுவி காவல் நிலையத்திற்குள் சென்று விட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சோதனையில் அபராதம் விதிக்க வேண்டியது தானே? ஏன் அடித்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். பின்னர் 3 போலீசாரும் நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என கூறினர். பின்னர் அந்த வாலிபரையும் விடுவித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.