முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த வயதான தம்பதிக்கு எஸ்.பி. பாராட்டு

13-08-2019 02:44 PM

நெல்லை,

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள வீட்டினுள் அரிவாளுடன் நுழைந்து தாக்கிய முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்த்து போராடி விரட்டிய வயதான தம்பதியரை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் இன்று நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

சண்முகவேல் - செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற எஸ்.பி. அருண், அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், வீட்டில் சிசிடிவி பொருத்தியதற்குப் பாராட்டு தெரிவித்ததோடு துணிச்சலோடு போராடி, கொள்ளையர்களை விரட்டியதைப் புகழ்ந்தார். ஒரு மகனைப் போல் அந்தப் பாராட்டை உரித்தாக்குவதாகக் கூறினார்.

மேலும், வீட்டில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை இனி எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எஸ்.பி. அருண் சக்திகுமார் கூறினார்.

கொள்ளை - நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி இவர்கள் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். பிள்ளைகள் சென்னையில் வசிக்கின்றனர்.

ஞாயிறு இரவு  வீட்டின்  முன் பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர். அவர்களில் ஒருவர், துணி துண்டால் சண்முகவேலின் கழுத்தை இறுக்கினார். இதனால், அவர் கூச்சலிட்டார். உடனடியாக, வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார்.

செருப்பு, நாற்காலி, உள்ளிட்டவற்றைத் தூக்கி எறிந்து, அந்தக் கொள்ளையர்களை விரட்ட அவர் முயன்றார். அப்போது, முகமூடிக் கொள்ளையரில் ஒருவர், செந்தாமரை அணிந்திருந்த 40 கிராம் நகையைப் பறித்தார். இதைத் தடுக்க முயன்றபோது, செந்தாமரையின் கையில் கொள்ளையர் அரிவாளால் வெட்டினார்.  இருப்பினும் செந்தாமரை துணிச்சலுடன் போராடினார்.

முகமூடிக் கொள்ளையரின் பிடியில் இருந்து தப்பிய சண்முகவேலுவும் நாற்காலிகளைத் தூக்கி கொள்ளையர்களை நோக்கி வீசினார். வயதான தம்பதி இருவரும் துணிந்து போராடி, முகமூடிக் கொள்ளையர்களை விரட்டியடித்தனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள், வீட்டில் கிடைத்த கைரேகை தடயங்களை வைத்து விசாரணையை வேகப்படுத்தி இருப்பதாகவும், இரண்டு கொள்ளையர்களில் ஒருவர் வயதான கிழவர் என்றும், ஒருவர் இளைஞர் என்றும் சிசிடிவி காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.