பாளை. சாரதா கல்லுாரிக்கு தன்னாட்சி யு.ஜி.சி., குழுவினர் 2வது நாளாக ஆய்வு

10-08-2019 12:38 AM

திருநெல்வேலி, :

பாளை. சாரதா கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்காக யு.ஜி.சி., குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர்.

பாளை. சாரதா கல்லுாரியில் இளநிலை, முதுநிலை, எம்.பில்., பிஎச்.டி., உள்ளிட்ட 23 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 1644 மாணவிகள் படித்து வருகின்றனர். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கல்வியையும், பண்பாட்டு கலையையும் கல்லுாரி ஊக்குவித்து வருகிறது.

சாரதா கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்காக ராஜஸ்தான் பிகானிர் எம்.ஜி.எஸ்., பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சந்திரகலா படியா தலைமையில்,தெலுங்கானா, செகந்தராபாத் பாரதிய வித்யா பவன்ஸ் விவேகானந்தா அறிவியல் கல்லுாரி முதல்வர் அசோக், மத்திய பிரதேசம்  போபால் மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் சுஷி ஸ்ரீவஸ்தாவா, யு.ஜி.சி., கீழ்நிலை செயலர் சுரேஷ் ராணி, நெல்லை மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் மைதிலி, நெல்லை பல்கலை., பேராசிரியர்கள் லோகநாதன், மரிய ஆரோக்கிய ராணி ஆகியோர் சாரதா கல்லுாரியில் நேற்று முன்தினம் முதல் ஆய்வு செய்தனர்.

இரண்டாவது நாளான நேற்று அலுவலக செயல்பாடுகள், உள் தர மதிப்பீட்டு குழுவின் செயல்பாடுகள்,தேர்வுக் கட்டுப்பாட்டு குழு செயல்பாடுகள் உள்ளிட்ட

அனைத்தையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவிகளுடன் கலந்தாய்வு நடந்தது.

ஆய்வின் போது கல்லுாரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா, கல்வியியல் கல்லுாரி செயலர் துர்காம்பிகா அம்பா, பள்ளி செயலர் தவப்பிரியா அம்பா, முதல்வர் மலர்விழி, இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியைகள் உடன் இருந்தனர்.