வீடு புகுந்து 22 பவுன் நகை, ரூ 56 ஆயிரம் திருட்டு

10-08-2019 12:07 AM

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே பட்ட பகலில் வீட்டின் முன்பக்க கதடை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

நாகர்கோவில் வடசேரி அருகே பள்ளிவிளையைச் சேர்ந்தவர் வல்சலம்(67).ஓய்வுபெற்ற எல்.ஐ.சி விரிவாக்க அலுவலர். இவரது மனைவி சொர்ணபாய். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பணி நிமித்தம்  ஒருவர் வெளிநாட்டிலும் மற்றொருவர் கோவை மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து வரும் தம்பதியினர் நேற்று காலை வல்சலம் மார்த்தாண்டத்திற்கும், சொர்ணபாய் மயிலாடிக்கும் உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சென்றுள்ளனர். மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த வல்சலம் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. உடனே இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்ததில் வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து ஏ.எஸ்.பி ஜவகர் தலைமையில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிவு செய்தனர். கணவன் மனைவி வெளியே சென்றுள்ளதை அறிந்த யாரோ சிலர் இதை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வீட்டின் முன்பக்க கதவை பாரக்கோல் கம்பியால் நெம்பி திறந்ததில் கதவின் பூட்டுகள் தெறித்து கதவு திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த திருட்டால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.