ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு லாரிகள் பறிமுதல்

10-08-2019 12:06 AM

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் அருகே ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 லாரிகளை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

                மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம், தக்கலை, சுவாமியார்மடம் பகுதிகளில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி டிரைவர், தனது லாரியை நிaறுத்தி விட்டு அதிகாரிகளிடம் சென்றார். தனது லாரியின் பதிவு எண்ணை கொண்ட வேறு ஒரு லாரி போலியாக இயக்கப்படுவதாகவும், அந்த லாரி தற்போது அழகியமண்டபம் பகுதியில் நிறுத்தி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பவ இடம் சென்ற அதிகாரிகள் ஒரே பதிவு எண் கொண்ட இரு லாரிகள் இயக்கப்படுவதை உறுதிபடுத்தினர்.

     இதையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் உரிமையாளர்கள் அந்த வாகனத்துக்கான அசல் ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் உண்மையான ஆவணங்கள் கொண்ட லாரி விடுவிக்கப்படும் எனவும், போலியான முறையில் பதிவெண் பலகை பொருத்தப்பட்ட லாரியை கோர்ட்டுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

       ஒரே பதிவு எண்ணில் இரு லாரிகள் இயக்கப்பட்ட பின்பும் அவை புகார் தெரிவிக்கப்படாமல் இதுவரை வட்டாரபோக்குவரத்து துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படாததால், அதிகாரிகள் நடத்தும் வாகன கண்காணிப்பு மற்றும் சோதனை முறையாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.