கூவம் ஆற்றில் குதித்த செல்போன் திருடன் உட்பட இருவர் கைது

09-08-2019 11:58 PM


சென்னை:

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் செல்போன்,  நகையைப் பறித்த முயன்ற திருடன் கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சென்னை சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்தனர். அதே பகுதியில் சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த நபரிடம் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இருசக்கரவாகன நபர் திருடன் திருடன் என கூச்சலிட உடனே பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனைக் கண்டதும் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களைப் பிடிப்பதற்காக பொதுமக்கள் விரட்டிச்சென்றனர். ஆனால் கூட்டத்துக்குள் புகுந்து பைக்கை ஓட்டிய திருடர்கள் பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்து அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டனர். அப்போது அந்த வழியாக திருவல்லிக்கேணி ரோந்து போலீசார் வந்தனர். திருடர்களை பொதுமக்கள் விரட்டுவதைக் கண்டு உடனே சுதாரித்தபடி பைக்கில் விரட்டிச் சென்று திருடனைப் பிடிக்க முயன்றனர். ஒருவன் மட்டும் சிக்கினான். மற்றொரு திருடன் தப்ப முயன்று அருகில் இருந்த கூவம் ஆற்றில் குதித்தான். அவனையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதனையடுத்து திருட முயன்ற இரண்டு பேரையும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒருவர் பெயர் விக்கி என தெரியவந்தது. இருவர் மீதும் செல்போன் பறிப்பு மற்றும் நகை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.