கோழிப்பண்ணை அதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

08-08-2019 12:08 PM

சென்னை, ஆக. 8–

கோழிப்பண்ணை அதிபரை மிரட்டி ரூ. 50 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியை குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுத்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டை, பாலாஜி நகர் ஸ்ரீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மக்பூல்பாஷா (வயது 37). பீட்டர்ஸ் சாலையில் என்ஜி சிக்கன்ஸ் என்ற பெயரில் கறிக்கோழி வியாபாரம் செய்து வருகிறார். சென்னை ஐஸ்அவுஸ் யானைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி இம்ரான் என்பவன் மக்பூல்ஷாவை கொலை செய்யப்போவதாக ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டினான். தரவில்லை என்றால் கூலிப்படை மூலம் கொலை செய்து விடுவதாக பயமுறுத்தினான். 

அது குறித்து மக்பூல் பாஷா சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கடந்த மாதம் 3ம் தேதியன்று புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் ராயப்பேட்டை வழக்குப் பதிவு செய்து ரவுடி இம்ரானை தேடிவந்தனர். தலைமறைவான அவனை போலீசார் ரெட்ஹில்ஸ் அருகில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். 

விசாரணைக்குப்பின்னர் அவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். ரவுடி இம்ரான் மீது காங்கிரஸ் பிரமுகர் அப்பாசை கொலை வழக்கு மற்றும் அடிதடி, ஆட்கடத்தல் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ரவுடி இம்ரானை குண்டர் சட்டத்தில் அடைக்க கமிஷனர் விஸ்வநாதனுக்கு ராயப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர். 

அதன் பேரில் இம்ரானை ஓராண்டு ஜாமினில் வெளிவரமுடியாத குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.