சிக்கிய ‘அட்டேன்ஷன் டைவர்சன்’ கொள்ளையன்: மடக்கிப்பிடித்த வேப்பேரி ஏசி மகேஷ்வரி டீம்

03-08-2019 04:38 PM

சென்னை,              

சென்னையில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி லட்சக்கணக்கில் நகைகளை அபேஸ் செய்த 78 வயது கொள்ளையனை சென்னை பெரியமேடு போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கைது செய்துள்ளனர். செக்ஸ் டாக்டரிடம் காட்ட வந்த போது மடக்கிப் பிடித்ததாக சுவாரஷ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வயது முதிர்ந்த பெண்களிடம், அரசு நிதியுதவி பெற்றுத்தருவதாக அவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று நகைகளை ஒரு மர்ம நபர் அபேஸ் செய்வதாக ஏராளமான புகார்கள் பெரியமேடு மற்றும் வேப்பேரி போலீஸ் நிலையங்களில் குவிந்தன. திருநின்றவூரைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 72 வயது மூதாட்டி அளித்த புகாரில், ‘‘கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றேன். அப்போது எனது அருகில் வந்த வயதான பெரியவர் ஒருவர், பிரதமர் நரேந்திரமோடி புதிதாக அறிவித்துள்ள மத்திய அரசு நிதி பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். அதனால் நானும் அவரை நம்பி ஆட்டோவில் ஏறி சென்றேன். பெரியமேடு நேவல் ஆஸ்பத்திரி ரோட்டுக்கு அழைத்துச் சென்ற அவர் நகைகளுடன் சென்றால் உதவித்தொகை கிடைக்காது. அதனால் அவற்றை கழற்றி கையில் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவரே நகைகளை பொரிந்து தருவதாக கூறி என்னிடம் இருந்த 5 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டார். எதிரே உள்ள அலுவலகத்தை காட்டி அதிகாரியை சந்தித்து விட்டு வருவதாக சென்றவர் அப்படியே சென்று விட்டார். நகைப்பார்சலை திறந்து பார்த்த போது உள்ளே கருங்கற்கள் இருந்தன. எனது நகையை மீட்டுத்தாருங்கள்’’ என புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வேப்பேரி உதவிக்கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், செல்லப்பா, தனலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தரி மட்டுமின்றி, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் இதே போல வயதான பெண்களிடம் நயமாகப் பேசி நகைகளை அபகரித்துச் சென்றது நடந்திருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில், மூதாட்டி தனலட்சுமியிடம் ஆட்டையைப்போட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் பழைய குற்றவாளியான திருவள்ளூர், பெரியபாளையத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்கிற அமீர்பாஷா (வயது 78) என தெரியவந்தது. அவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே போல வயதான முதியவர்களிடம் கவனத்தை திசை திருப்பி நகைகளை கொள்ளையடித்துள்ளார். சென்னை மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களிலும் கைவரிசை காட்டிவந்துள்ளான். கடந்த 2013ம் ஆண்டு ஜாமினில் வெளிவந்தவன் அதன் பிறகு போலீசில் சிக்காமல் இந்த சம்பவத்தை சாமர்த்தியமாக நடத்தியுள்ளார். பல இடங்களில் கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கிய போது, தனது வயது முதிர்வை காரணம் காட்டி தப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை தீவிரமாக ஆய்வு செய்த அதனை பின்தொடர்ந்தனர். அப்போது அண்ணாசாலை, கிண்டி, பல்லாவரம் வழியாக அமீர்பாஷா பெருங்களத்துார் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்குள்ள ஒரு செக்ஸ் டாக்டர் கிளினிக்கு அவர் அடிக்கடி வருவதை அறிந்த போலீசார், அந்த செக்ஸ் டாக்டர் மூலமாகவே அவரை பின்தொடர்ந்தனர். 15 நாட்களாக அவனைப் பின்தொடர்ந்த போலீசார் நேற்று முன்தினம் அந்த செக்ஸ் கிளினிக்குக்கு அமீர்பாஷா வந்த போது மடக்கிப் பிடித்து கைது செய்தனர். முதலில் போலீசாரிடம், நானே வயதானவன், நான் எப்படி சார் நகை கொள்ளையில் ஈடுபட முடியும் என நடித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை பெரியமேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கமான பாணியில் விசாரணை நடத்தியதில் வயதான மூதாட்டிகளிடம் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 60 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். அமீர்பாஷாவின் உண்மையான பெயர் புஷ்பராஜ். முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் தனது பெயரை அமீர்பாஷா என மாற்றிக் கொண்டார். வெளியூர்களில் பெரும்பாலும் இந்த பெயரையே பயன்படுத்தியுள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களிடம் கைவரிசை காட்டியுள்ளார். கொள்ளையடித்த நகைகளை விற்று தனது பேத்திக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மீதி நகைகளை பெண்களிடம் உல்லாசமாக இருந்து செலவு செய்துள்ளார். தனக்கு ஆண்மை குறைவு என்பதால் செக்ஸ் டாக்டரிடம் வந்து சிகிச்சை பெற்றதாகவும், போலீசில் சிக்கிக் கொண்டதாகவும் மேற்கண்ட பரபரப்பு தகவல்களை அமீர்பாஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். விசாரணைக்குப் பின்னர் அமீர்பாஷாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.