மேயர் உமாமகேஷ்வரி உள்ளபட 3 பேர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:

30-07-2019 09:41 AM

சென்னை:

நெல்லை முதல் மேயர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார்.

நெல்லை மாநகராட்சி முதல் பெண் மேயர் உமா மகேஷ்வரி. இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் 2 பேரும் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 23-ம் தேதி மாலை அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், உமா மகேஷ்வரி, முருகசங்கரன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தனர். தடுக்க வந்த வீட்டுப் பணிப்பெண் மாரியையும் கொலை செய்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகனுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார். டிஜிபி ஜாபர்சேட், ஐஜி சங்கர் மேற்பார்வையில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் நேற்றே சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.